திருவாரூரில் தீ விபத்து: 5 கூரை வீடுகள் எரிந்து நாசம்; ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்

திருவாரூரில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் ரூ.15 லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்தன.

Update: 2019-07-04 23:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் நெய்விளக்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு சொந்தமான கூரை வீடு நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மள மளவென அடுத்தடுத்து இருந்த லட்சுமி, குமார், செல்வம், அபூர்வம் ஆகிய 4 பேரின் கூரை வீடுகளுக்கும் பரவியது. அந்த பகுதியில் ஒரே நேரத்தில் 5 பேரின் வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் திருவாரூர், நன்னிலம், கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

ரூ.15 லட்சம் சேதம்

தீ விபத்தில் பழனிவேல், லட்சுமி, குமார், செல்வம், அபூர்வம் ஆகிய 5 பேரின் கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமாயின. வீடுகளில் இருந்த டி.வி., பீரோ மற்றும் கட்டில் உள்ளிட்ட மர சாமான்கள் உள்பட ரூ.15 லட்சம் மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தாசில்தார் நக்கீரன், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர் அன்பரசன், மாவட்ட தீயணைப்பு அதிகாரி முருகேசன் ஆகியோர் அங்கு சென்று தீ விபத்தில் எரிந்து நாசமான வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக தீ விபத்துக்குள்ளான வீடுகளில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை தீயணைப்பு படை வீரர்கள் அப்புறப்படுத்தினர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

பட்டாசு வெடிப்பு

அந்த பகுதியில் நேற்று நடந்த ஒருவருடைய இறுதி ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கப்பட்டதாகவும், பட்டாசில் இருந்து தீப்பொறி கிளம்பி கூரை வீட்டில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்