ஈரோடு சாஸ்திரி நகரில், பினாயில் தொழிற்சாலையில் அமிலவாயு வெளியேறியதால் பரபரப்பு - மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி
ஈரோடு சாஸ்திரி நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அமிலவாயு வெளியேறியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டார்கள்.
ஈரோடு,
ஈரோடு சாஸ்திரி நகர் வாய்க்கால்மேடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பினாயில் மற்றும் சோப்பு ஆயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு பல்வேறு விதமான அமிலங்கள் டேங்கரில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் நைட்ரிக் அமிலம் வைக்கப்பட்டு இருந்த டேங்கரில் கசிவு ஏற்பட்டு மஞ்சள் நிறத்தில் அமிலவாயு வெளியேறியது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதுபற்றி பொதுமக்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு கசிவு ஏற்பட்ட வால்வு பகுதியை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் அமிலவாயு வெளியேறியதை கட்டுப்படுத்த முடியவில்லை. அதைத்தொடர்ந்து அந்த டேங்கரில் இருந்த அமிலவாயு மற்றொரு டேங்கரில் நிரப்பப்பட்டது. அதன்பிறகே கசிவு நின்றது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘இந்த தொழிற்சாலையால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வருகிறோம். எனவே இந்த தொழிற்சாலையை இங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.