ஊத்துக்குளி அருகே, சரக்கு வேன் மோதி கல்லூரி மாணவர் பலி - மாற்றுச்சான்றிதழ் பெற்று திரும்பிய போது பரிதாபம்

ஊத்துக்குளி அருகே கல்லூரி படிப்பை முடித்து மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிய மாணவர் சரக்கு வேன் மோதியதில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-07-03 22:30 GMT
ஊத்துக்குளி,

திருப்பூர்-காங்கேயம் மெயின் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு அருகே உள்ள குன்னங்கல்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 20). இதுபோல் திருப்பூர்-காங்கேயம் ரோடு கோம்பை தோட்டம் பகுதியை சேர்ந்த ரகுமான் என்பவரது மகன் முகமது தாஹா (20). நண்பர்களான மோகன்ராஜ் மற்றும் முகமது தாஹா ஆகிய இருவரும் ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை கடந்த கல்வி ஆண்டில் நிறைவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கல்லூரியில் இருந்து மாற்றுச்சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு இருவரும் முகமது தாஹாவிற்கு சொந்தமான மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை முகமது தாஹா ஓட்டிச்செல்ல மோகன்ராஜ் பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் சிட்கோ அடுத்த மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வேன் இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். முகமது தாஹா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு வேன் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்