தாம்பரத்தில் மின்கசிவால் 4 குடிசைகள் எரிந்து சாம்பல்; சிலிண்டர் வெடித்ததால் பொருட்கள் நாசம்
தாம்பரத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் எரிந்து நாசமாகின. சிலிண்டர் வெடித்ததால் பொருட்கள் நாசமானது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது குடிசை வீட்டில் நேற்று மதியம் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டது. இதனால் திடீரென குடிசை தீப்பிடித்து எரிந்தது.
இந்த வீட்டின் அருகில் மோகன்ராஜ் (51) என்பவர் தனது வீட்டின் மாடியில் 3 குடிசைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். முருகன் வீட்டில் பிடித்த தீ அருகில் உள்ள மோகன்ராஜின் 3 வீடுகளுக்கும் பரவியது. இதில் மதியழகன் என்பவரது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதனால் 3 வீடுகளும் முற்றிலும் எரிந்தன.
அதேபோல், மோகன்ராஜ் மற்றும் அவரது தம்பி வெங்கட் ஆகியோரின் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப்பொருட்களும் எரிந்தன. அதேபோல் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வேலாயுதம் என்பவரது வீடும் சேதம் அடைந்தது.
இந்த தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயை தாம்பரம் தீயணைப்பு படையினர் வந்து அணைத்தனர். விபத்து தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து நடந்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் அனைவரும் உயிர் தப்பினர்.