சொத்து தகராறில் தாயை கொன்ற மகன்

வாலாஜாபாத் அருகே பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-03 22:45 GMT

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த கிதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி பட்டம்மாள் (வயது 45) இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலையை விட்டு பிரிந்து வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம் பெரிய காலனி பகுதியில் பூசிவாக்கத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜேந்திரனுடன் பட்டம்மாள் வசித்து வந்தார்.

பட்டம்மாள் முதல் கணவருக்கு பிறந்த மகன் மற்றும் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. ஒரு மகளுக்கு திருமணமாகவில்லை.

பட்டம்மாளின் முதல் கணவர் மூலம் பிறந்த மகன் சுரேஷ் கிதிரிப்பேட்டை பகுதியில் உள்ள பூர்வீக சொத்தை விற்க வேண்டும் என்று அடிக்கடி புளியம்பாக்கம் வந்து தனது தாயை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் புளியம்பாக்கம் வந்து மீண்டும் பட்டம்மாளிடம் பூர்வீக சொத்தை விற்க வேண்டும். அதற்கு தாயின் கையொப்பம் வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

அதற்கு பட்டம்மாள் பூர்வீக சொத்தை விற்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் தாய், மகன் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது சுரேஷ் அருகில் இருந்த கத்தியை எடுத்து பட்டம்மாளின் கழுத்திலும், உடலிலும் குத்தி உள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது பட்டம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்