காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் - நமச்சிவாயம் வேண்டுகோள்
காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என புதுவை மாநில தலைவர் நமச்சிவாயம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் பேரியக்கத்தின் ஒப்பற்ற தலைவர் ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு இந்திய தேசமே அதிர்ந்து போய் இருக்கிறது. ராகுல்காந்தியின் ராஜினாமா செய்தி ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டன் இதயத்திலும் பேரிடியாக விழுந்துள்ளது.
அனைத்து தரப்பு மக்களையும் அன்புடன் அரவணைத்து எளிய முறையில் அரசியல் செய்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியேற்ற உடன் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாரதீய ஜனதாவின் கோட்டையை தகர்த்தெறிந்து மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதவாத பாரதீய ஜனதா, நாட்டு மக்களிடம் பிரிவினையை தூண்டி நாட்டின் பாதுகாப்பை அரசியலாக்கி பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை மாயவலையில் சிக்க வைத்து ஜனநாயகத்தை சீர்குலைத்து சூழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டது.
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என நிரூபிக்க தங்களின் தலைமையிலான காங்கிரஸ் பேரியக்கத்தால் மட்டுமே முடியும் என்பதுதான் நாடறிந்த உண்மை.
இந்தியாவின் இரும்பு மங்கை இந்திரா காந்தி, தலைவர் ராஜீவ் காந்தி, தலைவி சோனியா காந்தி ஆகியோர் காட்டிய தூய பாதையில் பயணித்து காங்கிரஸ் பேரியக்கத்தை காத்து கொண்டிருக்கும் ராகுல்காந்தி ராஜினாமா முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் தோல்விக்கு ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் பொறுப்பு உண்டு என்பதை தயவுகூர்ந்து ஏற்றுக்கொண்டு தியாக தலைவர்களால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்தை காத்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.