மணக்குடி கல்லறை தோட்டத்தில் பதுக்கி வைத்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மணக்குடி கல்லறை தோட்டத்தில் பதுக்கி வைத்து இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-07-03 23:00 GMT
நாகர்கோவில்,

அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி சுசீலா, வருவாய் ஆய்வாளர் அனந்தகோபால் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் அருகே மணக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கல்லறை தோட்டத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான பிளாஸ்டிக் சாக்கு மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 30 மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. உடனே அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து நாகர்கோவில் கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவற்றை கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.

இந்த ரேஷன் அரிசி மூடைகளை கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக யாரோ கல்லறை தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் யார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சரளாகுமாரி மற்றும் பணியாளர்கள், நாகர்கோவில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் நேற்று இரணியல் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நாகர்கோவில்- புனலூர் பயணிகள் ரெயிலிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பெட்டியில் சாக்குப்பைகள் இருந்தன. அதிகாரிகள் அந்த சாக்குப்பைகளை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் அந்த அரிசி கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்