மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் மீது டெம்போ மோதி தந்தை, 2 மகன்கள் பலி

மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் மீது டெம்போ மோதிய விபத்தில் தந்தை, 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-07-03 22:45 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் நய்காவ் சிட்டிசன் காலனி பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (வயது40). இவர் தனது மனைவி மேரி (35), மகன்கள் பென்னி (10), இஸ்யேல் (5) ஆகியோருடன் காரில் வெளியே புறப்பட்டு சென்றார். மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை சாத்திவிலி மேம்பாலத்தில் நேற்று முன் தினம் மாலை 6.30 மணி அளவில் அந்த கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது அதே சாலையில் பின்னால் வந்த டெம்போ ஒன்று திடீரென கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பள மாக நொறுங்கியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

விபத்து நடந்த உடனே டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் வாலிவ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் தாமஸ் மற்றும் அவரது 2 மகன்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த மேரிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற டெம்போ டிரைவரை கைது செய்த னர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்