சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் மரத்தடியில் படித்து வருகின்றனர்.

Update: 2019-07-03 22:30 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் 1967-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 8-ம் வகுப்பு மற்றும் ஆய்வுக்கூடம் பிரிவுகளுக்கு உள்ள கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் இருந்ததால் இடித்து அகற்றப்பட்டன. இந்நிலையில் 8-ம் வகுப்பு மற்றும் ஒரு சில வகுப்பு மாணவர்கள் படிப்பதற்கு வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் தினந்தோறும் பள்ளி வளாக மரத்தடியில் படித்து வருகின்றனர்.

மேலும் ஆய்வகமும் இல்லை. இப்பள்ளியில் சுற்றுச்சுவர் முன்புறமாக உள்ள சுவர் ஆங்காங்கே இடிந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன. மேலும் மதிய நேரத்தில் மாணவர்கள் உணவு உட்கொள்ள போதுமான வசதி இன்றி வெட்டவெளியில் விளையாட்டு மைதானங்களில் அமர்ந்து உணவு உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

எனவே இப்பள்ளிக்கு கூடுதலாக வகுப்பறைகள் கட்டித் தரவும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிடம் கட்டவும், மாணவர்கள் அமர்ந்து உணவு உட்கொள்ள உணவு அறை கட்டித்தரவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்