கடும் வறட்சி எதிரொலி: வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டியை தேடி வரும் யானை கூட்டம்
கடும் வறட்சி எதிரொலி காரணமாக வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை தேடி யானை கூட்டம் படையெடுத்து வருகின்றன.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, ஓசூர் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானைகள், மான்கள், காட்டெருமைகள், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. பருவ மழை பொய்த்து போனதால் வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி காணப்படுகிறது. வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு விட்டன. மரங்களும் வெயிலில் கருகிவிட்டன.
இதன் காரணமாக வனவிலங்குகள் போதிய உணவு மற்றும் தண்ணீர் இன்றி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. அவ்வாறு வரும் வனவிலங்குகள் வாகனங்கள் மோதி இறக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.
இதைத் தொடர்ந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் டிராக்டர்கள் மற்றும் லாரிகள் மூலம் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதன் காரணமாக யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த தொட்டிகளுக்கு கூட்டம், கூட்டமாக படையெடுத்து வந்து உற்சாகமாக தண்ணீர் குடித்து செல்கின்றன. மேலும் யானைகள் தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சி ஒன்றன் மீது ஒன்று அடித்து உற்சாகமாக விளையாடு கின்றன.
வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்பப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.