உசிலம்பட்டி அருகே, ஊருக்குள் புகுந்த காட்டெருமை தண்ணீர் கிடைக்காமல் சாவு

உசிலம்பட்டி அருகே தண்ணீருக்காக காட்டிலிருந்து ஊருக்குள் புகுந்த காட்டெருமை ஒன்று அலைந்து திரிந்தும் தண்ணீர் கிடைக்காமல் பரிதாபமாக இறந்துபோனது.

Update: 2019-07-02 22:30 GMT
உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து வருவதினால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்தில் வாழும் உயிரினங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதை கருத்தில் கொண்டு வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக மலை அடிவாரங்களில் வனத்துறையின் சார்பில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள குடிநீர் தொட்டிகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டே கிடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் காட்டு பன்றிகள், காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு வரும் வன விலங்குகள் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து காட்டெருமை ஒன்று தண்ணீர் தேடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமமான மூப்பட்டிக்குள் புகுந்தது. அந்த காட்டெருமை தண்ணீர் தேடி அங்கு இங்குமாக அலைந்து திரிந்தது. ஆனால் அதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் கிராம மக்களை முட்டும் வகையில் அது அச்சுறுத்தியும் வந்தது. இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி வனத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல முற்பட்டனர். மேலும் தப்பி வந்த காட்டெருமைக்கு குடிநீரும் வைக்கப்பட்டது. ஆனால் மிரட்சியில் இருந்த அந்த காட்டெருமை அந்த தண்ணீரை குடிக்காமல் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த காட்டெருமை திடீரென்று சுருண்டு விழுந்து இறந்தது. பின்னர் போத்தம்பட்டி கால்நடை மருத்துவர் சிவக்குமார் உதவியுடன் வனத்துறையினர் காட்டெருமையை பரிசோதனை செய்து அந்த கிராமத்திலேயே அடக்கம் செய்தனர்.

இனிமேலாவது வனப்பகுதியில் விலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் அவ்வப்போது தண்ணீரை நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவற்றை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்