சதுரகிரி கோவிலில் மீண்டும் அன்னதான மடங்கள் அமைக்கக்கோரி வழக்கு - அதிகாரிகள் பரிசீலிக்க, ஐகோர்ட்டு உத்தரவு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் மீண்டும் அன்னதான மடங்கள் அமைக்கக்கோரிய வழக்கில் அதிகாரிகள் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரை திருநகரை சேர்ந்த ஆனந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

Update: 2019-07-02 22:30 GMT
மதுரை, 

சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். மலை அடிவாரத்தில் இருந்து பல அடி உயரத்தில் இந்த கோவில் உள்ளதால், பக்தர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துச் செல்ல வாய்ப்பு இல்லை.

இதனால் கோவில் அருகில் அன்னதான மடங்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு உணவு சமைத்து இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இது பல மணி நேரம் மலை ஏறி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் வசதியாக இருந்தது.

இந்தநிலையில் திடீரென அன்னதான மடங்கள் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அங்கு தனியார் சார்பில் இட்லி, தோசை போன்ற உணவுகள் கூடுதல் விலையில் விற்கப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பக்தர்களின் வசதிக்காக சுந்தரமகாலிங்கசுவாமி கோவிலில் மீண்டும் அன்னதான மடங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரரின் மனுவை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்