மாவட்டத்தில் ரூ.6¼ கோடியில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.6¼ கோடி செலவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 19 பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-07-02 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த பொதுப் பணித்துறை நீர்வள ஆதார பொறியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

குடிமராமத்து திட்டப்பணிகள் அனைத்தும் பாசன விவசாயிகளின் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், சம்பந்தப்பட்ட நீர்பாசன பகுதி பாசன சங்க விவசாயிகளை கொண்டு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பாசன சங்கத்தின் மூலம் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்பு தொகையுடன் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்த ஒரு துறையின் ஒப்பந்ததாரர்களின் மூலமாகவும், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளவும், மேட்டூர் அணைக்கோட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளவும் மொத்தம் ரூ.6 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

குடிமராமத்து திட்டத்தின்கீழ் மோகனூர் பள்ள வாய்க்கால் கடைமடை விவசாயிகள் நலசங்கத்தின் மூலமாக ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் மோகனூர் வட்டத்தில் உள்ள பள்ள வாய்க்காலில் புனரமைக்கும் பணிகள், பரமத்திவேலூர் ராஜவாய்க்கால் விவசாயிகள் சங்கத்தின் மூலமாக ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வடகரையாத்தூர் கிராமத்தில் ராஜவாய்க்காலுக்கும், காவிரி ஆற்றுக்கும் இடையே ராஜவாய்க்கால் வலது கரையில் 200 மீட்டர் நீளத்திற்கு கரையை புனரமைக்கும் பணிகள் என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதேபோல் மேட்டூர் அணைக்கோட்டத்திற்கு உட்பட்ட 1,583 பாசனதாரர்களின் 4,629 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் புனரமைக்கப்படும். மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் முறைமை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் முறைமை பாசன விவசாயிகள் சபை ஆகியவற்றின் மூலமாக, மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் குமாரபாளையம் அக்ரஹாரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் மேட்டூர் கிழக்குகரை கால்வாயின் 3 கிளை வாய்க்கால்கள் மற்றும் 2 உப கிளைவாய்க்கால்களில் 6,590 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகளும், 4,855 மீட்டர் நீளத்திற்கு கரைகள் பலப்படுத்தும் பணிகளும், 818 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் பக்கச்சுவர் கட்டி லைனிங் செய்யும் பணிகளும், பழுதடைந்த 22 மதகுகளை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பொறியாளர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை முழுமையாக தொடர்ந்து கண்காணித்து பணிகள் விரைந்து நடைபெறவும், பாசன விவசாயிகள் பயன்பெறவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் பொதுப் பணித்துறை (நீர்வள ஆதாரம்) சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் கவுதமன், உதவி செயற்பொறியாளர் கவிதாராணி, மேட்டூர் அணைக்கோட்ட உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், பேரிடர் மேலாண்மைத்துறை தாசில்தார் ராமநாதன் உள்பட உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்