குமரிக்கு வந்த ரெயிலில் சுற்றுலா வழிகாட்டி மர்ம சாவு போலீசார் விசாரணை

குமரிக்கு வந்த ரெயிலில் சுற்றுலா வழிகாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-07-02 22:15 GMT
நாகர்கோவில்,

மதுரை தெற்கு மாசி வீதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டியாக பணியாற்றி வந்தார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்களில் 2 பேருக்கு திருமணமாகி விட்டது. கண்ணன் மனைவி மற்றும் மகன், மகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தோடு காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வந்துள்ளனர். அப்போது ரெயிலின் முன்பகுதியில் உள்ள முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சுஜாதா மற்றும் பிள்ளைகளும், பின்புறத்தில் உள்ள முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கண்ணனும் ஏறி பயணம் செய்தனர்.

மதுரை வந்ததும் கண்ணனின் மனைவி மற்றும் பிள்ளைகள் ரெயிலில் இருந்து இறங்கினர். ஆனால் கண்ணன் ரெயிலை விட்டு இறங்கவில்லை. ரெயில் நேற்று அதிகாலை வள்ளியூர் அருகே வந்தபோது கண்ணன் தான் பயணம் செய்த முன்பதிவு அல்லாத பெட்டியின் கழிப்பறை அருகே மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் கொடுத்தனர். அவர் வள்ளியூர் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் மோகன்தாஸ் மற்றும் போலீசார் கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவருடைய உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் மதுரையில் இருந்த வந்த அவருடைய உறவினர்கள் கண்ணனின் உடலைப் பெற்றுச் சென்றனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மசாவுகுறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்