குளங்களை தூர்வார வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குளங்களை தூர்வார வலியுறுத்தி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-07-02 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பக்கிரிசாமி, மாரிமுத்து, சங்கிலிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாநகரில் உள்ள சிவகங்கைகுளம், கொத்தன்குளம், கருணாசாமிகுளம், சாமந்தான்குளம், அரண்மனை குளம், அழகிகுளம், அய்யன்குளம், மாரிகுளம், தோப்புகுளம், அகழி, மோத்திரப்பசாவடி குளம், ஈஸ்வரமூர்த்தி குளம், கரந்தை தட்டான்குளம், குஜிலிகுளம், கிருஷ்ணன்கோவில் குளம், கோபாலன்குளம், வண்ணார்குளம், குளத்துமேட்டுதெரு குளம், உப்புகுளம், கல்லுக்காரதெரு குளம், ராஜாகோரி குளம் உள்ளிட்ட குளங்களையும் சமுத்திரம் ஏரியையும் தூர்வாரி தண்ணீர் நிரப்பி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.குளங்கள், ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குளங்கள், ஏரிகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்