குற்றாலம் அருவியில் குளிப்பவர்கள் சோப்பு பயன்படுத்த தடை கலெக்டர் ஷில்பா தகவல்

குற்றாலம் அருவியில் குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஷில்பா கூறியுள்ளார்.

Update: 2019-07-02 23:00 GMT
நெல்லை,

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சாரல் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குற்றாலம் சாரல் திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆண்டுதோறும் வருவார்கள். குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, போக்குவரத்தினை ஒழுங்கு செய்து, அருவிகளில் பொதுமக்களின் கூட்டத்தினை கட்டுப்படுத்தி, சமூக விரோத செயல் நடைபெறாதவாறு காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் நன்றாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். பெண்கள் உடை மாற்றும் அறை பகுதிகளில் கூடுதலாக பெண் போலீசாரை நியமித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். விபத்து மீட்பு பணிகளுக்கு 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்க வேண்டும். சிறப்பு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் பொதுமக்களின் வருகைக்கு தகுந்தவாறு பஸ்களை இயக்க வேண்டும். காலாவதியான உணவு பொருட்கள் விற்கப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். பெண்கள் உடை மாற்றும் பகுதியில் துப்புரவு பணி மற்றும் கட்டணம் வசூல் பணிகளில் சீருடை அணிந்த பெண்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேலும் குப்பைகளை உடனுக்குடன் கூடுதல் துப்புரவு பணியாளர்களை கொண்டு துப்புரவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அருவி மற்றும் முக்கியமாக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் கூடுதல் மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அருவி பகுதிகளில் உள்ள சுகாதார வளாகங்களை சுத்தமாக வைத்திடவும், சுற்றுலா பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருவிகளில் குளிக்கும் போது சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அருவிக்கரைகளிலும் விளம்பர பலகைகளை வைக்க வேண்டும்.

குற்றாலத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் சாரல் திருவிழா இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. சாரல் திருவிழா தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், சுற்றுலா அலுவலர் சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்