ஊட்டியில் பயங்கரம், கழுத்தை அறுத்து பெண் படுகொலை - போலீசார் விசாரணை

ஊட்டியில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-02 23:00 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நொண்டிமேடு பகுதியில் வசித்து வருபவர் பசுவராஜ்(வயது 47). விவசாயி. இவருடைய மனைவி உமா(43). இவர்களுக்கு ஆகாஷ், அபிஷேக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஆகாஷ் கோவையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அபிஷேக் ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துக்கொண்டு, தனியார் காட்டேஜில் பகுதி நேர ஊழியராக பணிபுரிகிறார். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் பசுவராஜ் வீட்டிற்கு வருவது இல்லை. அவரது உறவினருக்கு சொந்தமான காட்டேஜில் தங்கி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை அபிஷேக் பணி முடிந்து வழக்கம்போல் வீட்டுக்கு வந்தார். அப்போது படுக்கை அறையில் அவரது தாய் உமா கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். அதன்பின்னர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நேரில் வந்து பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொலை சம்பவம் நடந்த வீட்டில் இருந்து நொண்டிமேட்டின் மேல்பகுதி, சத்துணவு மைய பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளுக்கு நாய் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் போலீசார் கூறியதாவது:-

அபிஷேக் இரவில் வேலைக்கு சென்றபோது, உமா மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். சமையலறையில் வைத்து அவரது கழுத்து அறுக்கப்பட்டு உள்ளது. பின்னர் படுக்கை அறைக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு உள்ளது. அறையில் ஆங்காங்கே ரத்தம் படிந்து உள்ளது. வீட்டில் இருந்த நகை, பணம் போன்றவை திருட்டு போகவில்லை. இந்த படுகொலைக்கு காரணம் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையா அல்லது குடும்ப பிரச்சினையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஊட்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்