மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், 500 மாணவர்களுக்கு பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்க தலா ரூ.1 லட்சம் லஞ்சமா?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்க சுமார் 500 மாணவர்களிடம் தலா ரூ.1 லட்சம் லஞ்சம் கைமாறி இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஊழல் தடுப்புத் துறை அனுப்பிய புகார் கடிதத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-07-01 23:15 GMT
மதுரை, 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முறைகேடாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸ் தரப்பில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு, அந்த துறை இயக்குனர் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் நடத்தும் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி மையங்கள் மூலம் பெறப்பட்ட 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பெறப்பட்டுள்ளன.

இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பி.காம்., பட்டப்படிப்புக்காக பெறப்பட்டுள்ளன. மேலும், இந்த விண்ணப்பங்களில் மாணவரின் பெயரைத்தவிர புகைப்படம் உள்பட எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் போது இதுபோன்று விண்ணப்பித்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு வந்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கல்விக்கட்டணம் செலுத்தியதாக இணைக்கப்பட்டுள்ள வங்கி வரைவோலை நகல்களை ஆய்வு செய்த போது, அனைத்தும் போலியானவை என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் முறைகேடாக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்பு நிறைவு சான்றிதழ் வழங்க ஒவ்வொரு மாணவரிடம் இருந்து தலா ரூ.1 லட்சம் வரை லஞ்சமாக பெறப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

எனவே, இதுதொடர்பாக தற்போதைய தொலைநிலைக்கல்வி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கம்ப்யூட்டர் பிரிவு சூப்பிரண்டு சத்தியமூர்த்தி, ஊழியர் கார்த்திகைசெல்வன் மற்றும் 5 கல்வி மையங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதற்கு பல்கலைக்கழகம் அனுமதியளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பு புகார் கடிதம் எதிரொலியாக பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆட்சிமன்றக்குழு கூட்டம் கடந்த வாரம் கூடியது. அதில், லஞ்சஒழிப்புத்துறையினர் கேட்டுள்ள படி, விசாரணை நடத்த அனுமதி அளிப்பது என்று ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிரு‌‌ஷ்ணன் கூறும்போது, ‘‘தமிழக ஊழல் மற்றும் லஞ்சஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட ரகசிய கடிதத்தின் அடிப்படையில், உரிய விசாரணை நடத்த ஆட்சிமன்றக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அப்போது, பொறுப்பில் இருந்தவர்கள் இந்த விவகாரத்தில் என்ன முடிவு செய்தனர் என்பது எங்களுக்கு தெரியாது’’ என்றார்.

இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி மையங்களில் இருந்து மாணவர் சேர்க்கை பெற்றவர்கள், தேர்வு எழுத முன்தேதியிட்டு ஒப்புதல் வழங்கலாம் என்று பல்கலைக்கழகம் நியமித்த கமிட்டி பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையின் பேரில், அப்போதைய துணைவேந்தர், அந்த மாணவர்கள் தேர்வு எழுதவும், அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த பட்டியலில் பல மாணவர்களின் பெயர்கள் சிலரால் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுவே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில வருடங்களாக பல்கலைக்கழகம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. பணி நியமனங்களை பொறுத்தமட்டில், முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கூறப்படுகிறது. சம்பளம் பெறாமலேயே தற்காலிக பணியாளர்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்