கிள்ளை அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
கிள்ளை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
பரங்கிப்பேட்டை,
கிள்ளை அருகே உள்ள நஞ்சமகத்துவாழ்க்கை பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவரது மகன் பாரதிராஜா (வயது 32). இவர் பரங்கிப்பேட்டை அருகே அகரம் மானம்பாடியில் உள்ள குட்டைகளில் மீன்களுக்கு இரை போடும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற பாரதிராஜா, மீன்களுக்கு இரை போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது மீன் குட்டைகளுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த பாரதி ராஜா, உடைப்பு ஏற்பட்ட வாய்க்காலில் மண் அள்ளிப்போட்டுக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அங்கிருந்த ஜெனரேட்டரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருந்ததாக தெரிகிறது. அப்போது வாய்க்காலில் மண் அள்ளிப்போட்டுக் கொண்டிருந்த பாரதி ராஜா மீது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான பாரதி ராஜாவின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாரதி ராஜாவின் தாய் அங்கையற்கரசி கிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.