நீர்சேமிப்பு திட்ட முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

ஜல்யுக்த் சிவார் நீர்சேமிப்பு திட்ட முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கு மேல்-சபை தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2019-07-01 23:30 GMT
மும்பை, 

ஏரிகள், குளங்கள், ஓடைகள் போன்ற நீர் நிலைகளை ஆழப்படுத்தி நீர் சேமிப்பை பெருக்க ஜல்யுக்த் சிவார் நீர்சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் சமீபத்தில் மேல்-சபையில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது.

அப்போது மந்திரி தானாஜி சாவந்த் சுமார் 1,300 பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, இந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை மூலம் விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நேற்று மேல்-சபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி. ஹேமந்த் தாக்லே இந்த பிரச்சினையை கையில் எடுத்து பேசினார். அப்போது குறுக்கிட்ட வித்யா சவான் எம்.எல்.சி (தேசியவாத கங்கிரஸ்), பரந்தர் தாலுகாவில் மட்டும் இதுவரை ரூ.200 கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான விவாதத்தை தொடர்ந்து, மராட்டிய மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர், “ஜல்யுக்த் சிவார் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுமார் 1,300 பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த அரசுக்கு உத்தரவிடுகிறேன்” என்றார். 

மேலும் செய்திகள்