மக்காச்சோளம்,- வெங்காய பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

மக்காச்சோளம்- வெங்காய பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திருவோடு ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-01 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிரினை பயிரிட்டு படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை மற்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வெங்காய பயிருக்கும் நிவாரண தொகைகளை வழங்க வேண்டும். போதிய மழையின்மையால் வறட்சி நிலவுவதால் விவசாயிகளின் வங்கி கடனை உடனடியாக மத்திய- மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று நூதன போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தங்களது சட்டையை கழற்றி அரை நிர்வாணத்திலும், கையில் திருவோடு ஏந்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான மக்காச்சோள பயிருக்கும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வெங்காய சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நூதன போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் விவசாயிகள் திருவோடு ஏந்தியவாறு கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து சென்று, இது தொடர்பாக மனு ஒன்றினை கலெக்டர் சாந்தாவிடம் வழங்கி விட்டு சென்றனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த போது விவசாயிகள் திடீரென்று இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்