நாகையில் ஆட்டோ ஒர்க்‌ஷாப் எரிந்து சாம்பல் ரூ.3½ லட்சம் பொருட்கள் சேதம்

நாகையில் ஆட்டோ ஒர்க்‌ஷாப் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.3½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

Update: 2019-07-01 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை அக்கரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது34). இவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள இடத்தில் ராஜரத்தினம் (42) என்பவர் ஆட்டோ ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ராஜரத்தினம் ஆட்டோ ஒர்க்‌ஷாப் அருகில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பட்டாசு வெடித்தனர். அப்போது ஆட்டோ ஒர்க்‌ஷாப்பில் தீப்பொறி விழுந்ததாக தெரிகிறது. இதனால் ஒர்க்‌ஷாப் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் ஒர்க்‌ஷாப் முழுவதும் எரிந்து சாம்பலானது.

இந்த தீவிபத்தில் பழுது நீக்கம் செய்ய நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோக்களின் என்ஜின்கள் மற்றும் உதிரி பாகங்கள் என உள்ளிட்டவைஎரிந்து சேதம் அடைந்தது. இதன் சேதமதிப்பு சுமார் ரூ.3 ½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நாகை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்த ஒர்க்‌ஷாப்பில் நேற்று யாரும் பணியில் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்