குடியுரிமை வழங்கக்கோரி இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு
இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் குடியுரிமை வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே எம்.மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்து வரும் பொதுமக்கள் குடியுரிமை வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரின்போது நாங்கள் படகு மூலம் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக குடியேறினோம். பின்னர் பல மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் நாங்கள் குடியமர்த்தப்பட்டோம்.
1990-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை கிருஷ்ணகிரி, வேலூர், ஆற்காடு மற்றும் மண்டபம் முகாம்களில் வசித்து வந்தோம். பின்னர் 2002-ம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டியில் உள்ள முகாமில் வசித்து வருகிறோம்.
நாங்கள் அகதிகளாக இந்நாட்டிற்கு வந்து 29 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டில் வசித்து வரும் எங்களுக்கு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது. அதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
இருப்பினும் குடியுரிமை இல்லாததால் வேலைவாய்ப்பு, மருத்துவ படிப்பு போன்றவற்றை பெற முடியவில்லை. இதனால் தற்போதைய தலைமுறையினர் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே அதை கருத்தில் கொண்டு எங்களுக்கு குடியுரிமை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மயானத்திற்கு தனிச்சாலை மற்றும் எரிமேடையை அமைத்து தர வேண்டும் என அவர்கள் மற்றொரு மனுவையும் கலெக்டர் ஆசியா மரியத்திடம் வழங்கினர்.