குப்பை கிடங்கை மாற்றக்கோரி, நகராட்சி வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் - விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரத்தில் குப்பை கிடங்கை மாற்றக்கோரி நகராட்சி வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-01 22:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் குப்பைகள் நகராட்சியால் சேகரிக்கப்பட்டு விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தாம்பாளையம் பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கணக்கில் கொட்டப்பட்டு வரும் இந்த கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. இங்கு ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி கழிவுகளும் கொட்டப்பட்டு வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த குப்பைகளை அவ்வப்போது தீ வைத்து கொளுத்தி விடுவதால் அதில் இருந்து வெளியேறும் நச்சு புகையினால் முத்தாம்பாளையம், ஓம்சக்தி நகர், ஆர்.பி. நகர், அகரம்பாட்டை, சித்தேரிக்கரை, இந்திரா நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சருமநோய் மற்றும் சுவாச கோளாறுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த கிடங்கில் இருந்து குப்பைகள் அனைத்தையும் அள்ளக்கோரியும், குப்பை கிடங்கை குடியிருப்பு பகுதிக்கு அப்பால் இடமாற்றம் செய்யக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் நகராட்சி நிர்வாகம் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை தொடர்ந்து, இங்குள்ள கிடங்கிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் இங்குள்ள கிடங்கில் கொட்டுவதற்காக குப்பைகளை ஏற்றிக்கொண்டு நகராட்சி வாகனங்கள் வந்தன. இதை பார்த்ததும் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென அந்த வாகனங்களை சிறைபிடித்து அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை. இதனால் வாகன போக்குவரத்தை விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக திருப்பி விட்டனர்.

இதனிடையே நகராட்சி ஆணையாளர் லட்சுமி அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இங்கிருந்து உடனடியாக குப்பை கிடங்கை மாற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தனர். அதன் பின்னர் குப்பை கிடங்கை மாற்ற விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் லட்சுமி உறுதியளித்தார். இதனை ஏற்ற பொதுமக்கள் காலை 10 மணிக்கு மறியலை கைவிட்ட தோடு நகராட்சி வாகனங்களையும் விடுவித்தனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்