அந்தியூர் அருகே பர்கூர் ரோட்டில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை

அந்தியூர் அருகே பர்கூர் ரோட்டில் யானை ஒன்று சுற்றித்திரிந்தது.

Update: 2019-07-01 22:15 GMT
அந்தியூர், 

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மரம்,செடி-கொடிகள் காய்ந்து கருகி விட்டன. குறிப்பாக வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகள் வறண்டு காணப்படுகிறது.

இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வனப்பகுதியில் கிடைப்பதில்லை. இதனால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று, பர்கூர் ரோட்டில் சுற்றித்திரிந்தது.

மேலும் அந்த யானை சாலையோரங்களில் வளர்ந்து காணப்படும் மூங்கில் மரக்கிளைகளை முறித்து தின்றது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், யானை நிற்பதை பார்த்ததும் தங்களுடைய வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்திக்கொண்டனர். பின்னர் அவாகள் அந்த யானையை தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘தற்போது வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறி கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுவதோடு, சாலையோரங்களில் சுற்றித்திரிகிறது. குறிப்பாக யானைகள் சாலையோரங்களில் அடிக்கடி உலா வருகின்றன.

அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். மேலும் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது. குறிப்பாக சாலையோரங்களில் சுற்றித்திரியும் குரங்குகள், மான் மற்றும் யானைகளுக்கு உணவுகள் கொடுக்கக்கூடாது.

அவ்வாறு உணவு கொடுத்து பழகினால் வனவிலங்குகள் உணவுக்காக சாலையில் சுற்றித்திரியும். அதனால் மான், குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்க வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்