பெருந்துறை பேரூராட்சி பகுதியில் நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை பணி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியது

பெருந்துறை பேரூராட்சி பகுதியில் நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை பணி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியது.

Update: 2019-07-01 22:30 GMT
பெருந்துறை, 

பெருந்துறை பேரூராட்சி பகுதியில் தற்போது பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது.

இதற்காக, பெருந்துறை அய்யர் குளம், பணிக்கம்பாளையம் குப்பை கிடங்கு, சென்னியவலசு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில், சாக்கடை நீரை தேக்கி வைக்கும் தரைமட்ட தொட்டிகளை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி சென்னியவலசு பகுதியில் நடந்த பணியை, அந்த ஊரைச்சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்தி விட்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, "பாதாள சாக்கடை கழிவு நீர் சேகரிப்புக்காக தரை மட்ட குழி தோண்ட பெருந்துறை பேரூராட்சி கையகப்படுத்திய இடம் சென்னியவலசு கிராமத்தின் மயானமாக பயன்பட்டு வருகிறது. இந்த இடத்தில் சாக்கடை கழிவு நீரை சேமிப்பதற்காக தரை மட்ட தொட்டி கட்டினால், இறந்தவர்களின் உடல்களை எங்கு கொண்டு புதைப்பது?. மேலும், இந்த இடத்தை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளது. அதனால் கழிவு நீரால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்"் என்று கூறினர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அன்றைய தினம் பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.

இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தரப்பட்டது. அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவின் பேரில், நேற்று மீண்டும் குடிநீர் வடிகால் வாரிய செயல் பொறியாளர் மணிவண்ணன், கூடுதல் கோட்டப் பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் ரேவதி, பெருந்துறை தாசில்தார் துரைசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, தரைமட்ட தொட்டிக்கான பணியை பொக்லைன் எந்திரம் மூலம மீண்டும் தொடங்கினர்.

அப்போது பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் பொதுமக்கள் யாரும் பணியை தடுக்க வரவில்லை.

மேலும் செய்திகள்