சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி மீனவ குடும்பத்தினர் கருப்பு கொடியுடன் போராட்டம்

சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி கடலூரில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2019-06-30 22:45 GMT
கடலூர், 

தமிழகம் முழுவதும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தனர். இது பற்றி அறிந்ததும் கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் கொண்டு சென்ற சுருக்குமடி வலைகளை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

இதை கண்டித்து கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி மாவட்ட கலெக்டர், சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இருப்பினும் தங்களுக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் தங்களின் தெருக்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி தேவனாம்பட்டினம் மெயின்ரோட்டில் கருப்பு கொடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள், லாரிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்கும் வரை போராட்டத்தை விலக்கி கொள்ள மாட்டோம் என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது சிலர் கையில் மண்எண்ணெய் கேனுடன் பங்கேற்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமாரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முதுநகரில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணலாம் என்று அறிவுறுத்தினர். இதை கேட்ட மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையடுத்து கடலூர் முதுநகர் மீன்வளத்துறை அலுவலகத்தில் மீனவர்களுடன் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஆறுமுகம், இணை இயக்குனர் ரேணுகா, உதவி இயக்குனர் ரம்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி வலைகள், லாரிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் போன்ற கோரிக்கைளை மீனவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக மீனவர்கள், அதிகாரிகளிடையே நீண்ட நேரம் விவாதம் நடந்தது. அதன்பிறகு அதிகாரிகள், எங்களுக்கு உயர் அதிகாரி கலெக்டர் தான். அவர் தான் சுருக்குமடி வலை பயன்படுத்துவது பற்றிய பிரச்சினை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்றனர். இதை கேட்டதும் மீனவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்