கயத்தாறு அருகே பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
கயத்தாறு அருகே பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.
கயத்தாறு,
கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி குளத்தின் கரையில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக கயத்தாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்த நபர், நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளியை சேர்ந்த கருப்பசாமி (வயது 42) என்பது தெரியவந்தது. கொத்தனாரான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக கருப்பசாமி கடந்த புதன்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர் காட்டுப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.