திருப்பூர் சூசையாபுரம் பகுதியில் ரோட்டின் நடுவே நிற்கும் மின்கம்பத்தை அகற்றக்கோரி சாலை மறியல்

திருப்பூர் சூசையாபுரம் பகுதியில் ரோட்டின் நடுவே நிற்கும் மின்கம்பத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-30 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி பல மின்கம்பங்கள் ரோட்டின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமலே இருந்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் சூசையாபுரம் வடக்கு பகுதி ரெயில்வே வீதியை ஒட்டியுள்ள ரோட்டில் நடுவே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்றுகாலை அந்த ரோடு வழியாக வந்த தனியார் தண்ணீர் லாரி ஒன்று மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து சரிந்தது. மின்கம்பிகள் அறுந்து தொங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வாரிய ஊழியர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். ரோட்டின் நடுவே, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின்கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி சூசையாபுரம் மெயின்ரோட்டின் நடுவே கற்களை போட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

இந்த மின்கம்பத்தால் இங்குள்ள பொதுமக்கள் அவசர காலங்களில் இந்த வழியாக வாகனங்களை கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த மின்கம்பத்தை ரோட்டின் ஓரமாக நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி, அதே இடத்தில் புதிய மின்கம்பத்தை நட்டனர். இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்