ஆத்தூர் தொழில் அதிபர் மகன் கடத்தல் வழக்கு: கோடீஸ்வரராகி சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டோம்
கோடீஸ்வரராகி சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, ஆத்தூர் தொழில் அதிபர் மகனை கடத்தியதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ராசிபுரம் செல்லும் சாலையில் பாரதிபுரம் பவர்ஹவுஸ் எதிரில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம், தொழில் அதிபர். இவர் பெட்ரோல் விற்பனை நிலையம், மினி பஸ் மற்றும் கிரானைட் குவாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 35) என்பவர் கடந்த 18-ந் ேததி ஆத்தூர் அடுத்த மோட்டூர் தரைப்பாலம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரது காரை நிறுத்தி சுரேஷ்குமாரை அவர்கள் வந்த காரில் கடத்தி சென்று விட்டது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, கலியமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கடத்தல் கும்பல் உடனடியாக சேலம் பழைய பஸ் நிலையம் அருகே மறுநாளே(19-ந் தேதி) சுரேஷ்குமாரை விடுவித்து விட்டு தப்பிச்சென்றது. அதே நேரத்தில் இந்த கடத்தலில் 10 பேர் கும்பல் ஈடுபட்டதை கண்டுபிடித்த போலீசார் அவர்களில் பெண் உள்பட 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பிடிபட்ட கடத்தல் கும்பலான ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (29), சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த தீபக்ராஜா (34), சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த ெசந்தில்குமார் (39), அவருடைய தங்கை கவிதா(33) ஆகிய 4 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அந்த வாக்குமூலத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கவிதா, தனது அண்ணன் மற்றும் சிலருடன் சேர்ந்து சேலத்தில் வங்கிகளில் கடன் பெற்று தரும் ஏஜென்சியை நடத்தி வந்தோம். அதில் எங்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில் அங்கு பணிபுரிந்தவர்களும் கடனாளி ஆகிவிட்டோம்.
இந்த நிலையில் தான் எங்களுடன் கடனாளியாக கஷ்டப்பட்டு வந்த ஏத்தாப்பூரை சேர்ந்த ஹரிபிரசாத், ஆத்தூர் அருகே தங்களின் உறவினர் ஒருவர் தொழில் அதிபராக வசதியாக இருப்பதாகவும், அவரின் மகன் சுரேஷ்குமாரை கடத்தினால், நாம் கோடீஸ்வரராகி, கடன்களை அடைத்து விட்டு சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று திட்டம் போட்டோம்.
இதையடுத்து சுரேஷ்குமாரை கடத்தி ரூ.5 கோடி வரை மிரட்டி பணம் பறிக்க திட்டம் போட்டு சேலத்தில் ஒரு வாடகைக்காரை எடுத்தோம். அதில் தீபக் ராஜா பதிவு எண்ணை மாற்றினார். மேலும் சேலம் அருகே அல்லிக்குட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சுரேஷ்குமாரை அடைத்து வைத்து பணம் கிடைத்ததும் விடுவிக்கலாம் என்றும் முடிவு செய்தோம்.
அதன்பிறகு அவரை காரில் கடத்துவது குறித்து திட்டத்தை செயல்படுத்த கடத்தலுக்கு 2 நாளுக்கு முன்பு அவரின் வீட்டின் அருகே நோட்டமிட்டு ஒருவரை ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். இவ்வாறு நாங்கள் கடத்தலுக்கு முன்பு பேசிய செல்போன் பேச்சு தான் எங்களை போலீஸ் எளிதில் பிடிக்க காரணமாகி விட்டது. அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களின் மூலம் போலீசார் குறிப்பிட்ட நாட்களில் பதிவான புதிய எண்களை கண்டறிந்து எங்களை விரைந்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.