வாணாபுரத்தில் சேதமான பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை

வாணாபுரத்தில் சேதமான பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-06-30 22:15 GMT
வாணாபுரம், 

வாணாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இங்கு ஆங்கில வழிக்கல்வியும் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமான நிலையில் பள்ளி கட்டிடம் ஒன்று உள்ளது. எந்த ஒரு பயன்பாடும் இல்லாத இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதம் அடைந்து ஓடுகள் உடைந்து மரக்கம்புகள் அந்தரத்தில் தொங்கி வருகின்றன.

மேலும் இங்கு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பது மட்டுமல்லாமல் வி‌‌ஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் மாணவ- மாணவிகள் அச்சத்துடன் அன்றாடம் வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சேதமான கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சேதமான பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்