வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது 69 பவுன் நகை பறிமுதல்
திருவேற்காடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள முட்புதரில் இருந்து மர்மநபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிச்சென்றபோது, முட்புதரில் பதுங்கி இருந்த மேலும் 2 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களது கையில் பூட்டை உடைக்க பயன்படுத்தப்படும் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களும், நகைகளும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரிச்சு(வயது 45), ராகேஷ்(26) என்பதும், இவர்கள் இரவு நேரங்களில் திருவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டுகளை உடைத்து திருடியதும் தெரிந்தது.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், இருவரிடம் இருந்து 69 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய இவர்களது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.