பாகூர் அருகே குளத்தை தூர்வார எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தால் பரபரப்பு

பாகூர் அருகே குளத்தை தூர்வார எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-29 22:00 GMT
பாகூர்,

புதுச்சேரி மாநிலத்தில் மழைநீரை சேகரிக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த நடவடிக்கையி்ன் ஒரு பகுதியாக மாநிலத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் பாகூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மு.புதுக்குப்பத்தில் உள்ள குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தர்ராஜன் தலைமையில் ஊழியர்கள், அந்த பகுதி தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் குளத்தை தூர்வாரும் பணியை ஊரக வளர்ச்சி துறை செயலாளர் அசோக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவரும் குளத்தை தூர்வாரினார். அதுபற்றி அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். அவர்கள், தொகுதி எம்.எல்.ஏ.வான தனவேலுவுக்கு அழைப்பு விடுக்காமல், எப்படி குளத்தை தூர்வாரலாம்? என்று கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மு.புதுக்குப்பம் கிராம மக்கள் சிலர் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களை சமாதானம் செய்தனர். இருந்த போதிலும் தூர்வாரும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்