குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வருகிற 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-06-29 23:00 GMT
புதுக்கோட்டை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ராசு தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் துரைமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில், தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. ஜனநாயக பூர்வமாக ஆர்ப்பாட்டங்கள் நடத்த காவல்துறை அனுமதி அளிக்க மறுக்கிறது. அடக்குமுறையை ஏவி போராடியவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது. இது ஜனநாயக விரோதமானது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முரட்டுத்தனமாக அமல்படுத்த முயற்சிப்பதை கைவிட வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள நகரம், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதற்கு உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்