அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவிகள் திடீர் முற்றுகை

ஸ்ரீரங்கத்தில் அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவிகள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-06-29 23:15 GMT
ஸ்ரீரங்கம்,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை அரசு வழங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவை நிறுத்தப்பட்டன. தற்போது, நடப்பாண்டு (2019-20) முதல் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று முதல் தொகுதி வாரியாக பிளஸ்-2 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 12 பள்ளிகளை சேர்ந்த 1,585 மாணவ-மாணவிகளுக்கு ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. அப்போது அப்பள்ளியில் ஏற்கனவே பிளஸ்-2 முடித்த 60-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் பள்ளி முன்பு திரண்டு கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எங்களுக்குத்தான் முன்னுரிமை அளித்து மடிக்கணினி கொடுக்கப்பட வேண்டும் என அங்கிருந்த போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக மாணவிகள் பள்ளிக்குள் செல்ல முடியாத வகையில் கயிறுகட்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் அம்மாணவிகளிடம்,‘பள்ளியில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் சென்று முறையிட அனுமதி அளிக்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும், முன்னாள் மாணவிகள் 6 பேரை மட்டும் போலீசார் பள்ளிக்குள் செல்ல அனுமதித்தனர். அம்மாணவிகளிடம் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் கலெக்டர் சிவராசு ஆகியோர் அரசின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டினர். பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில், “முன்னாள் மாணவ-மாணவிகளுக்கு 3-வது முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே,விடுபட்ட அனை வருக்கும் நிச்சயம் மடிக் கணினியை இந்த அரசு வழங்கும். இன்னும் 3 மாதத்தில் நிச்சயமாக இந்த பள்ளியில் ஏற்கனவே பிளஸ்-2 படித்த மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்” என உறுதி அளித்தார். அதை ஏற்று அம்மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுபோல் லால்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 36 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி நேற்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மண்ணச்சநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு பள்ளியில் இருந்து ஒரு மாணவன், ஒரு மாணவியை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அந்த பள்ளி முன் குவிந்தனர். ஆனால் அவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி கிடைக்காததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சமரசம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்