தஞ்சை அருகே வக்கீலிடம் ரூ.60 லட்சம் மோசடி; பத்திர எழுத்தர் கைது

தஞ்சை அருகே வக்கீலிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில் பத்திர எழுத்தரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-29 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திருப்பூந்துருத்தி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 55). இவர் வக்கீலாக பணி புரிந்து வருகிறார். இவரிடம் கண்டியூரை சேர்ந்தவரும், திருவையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தராக பணி புரிந்து வந்தவருமான மோகன், தனது பெண்ணின் படிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும், வீடு கட்டுவதற்காகவும் என கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து பல தவணைகளில் ரூ.40 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

இந்த கடனை கிருஷ்ணசாமி திருப்பி கேட்டபோது கடந்த 2017-ம் ஆண்டு கண்டியூர் அனுமார் கோவில் தெருவில் தான் குடியிருந்த வீட்டை ரூ.40 லட்சத்துக்கு அடமானமாக வைத்து கடன் பத்திரம் ஒன்றை மோகன் எழுதி கொடுத்தார். ஆனால் அவர், அந்த வீட்டை 2019-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி வேறொருவருக்கு விற்பனை செய்து விட்டார்.

மேலும் ரூ.20 லட்சம்

இந்த நிலையில் இடம் வாங்கி தருவதாக கூறி கிருஷ்ணசாமியிடம் மேலும் ரூ.20 லட்சத்தை மோகன் வாங்கி உள்ளார். ஆனால் அவர் வாங்கிய பணத்திற்கு இடம் வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் தன்னிடம் மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.60 லட்சத்தை பெற்ற மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் கிருஷ்ணசாமி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

கைது

அதன்பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக மோகனை கைது செய்தனர்.

பின்னர் அவரை திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை அடுத்த மாதம்(ஜூலை) 11-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்