தஞ்சை அருகே இருவேறு சம்பவங்களில் என்ஜினீயரிங் மாணவி உள்பட 2 மாணவிகள் தற்கொலை

தஞ்சை அருகே இருவேறு சம்பவங்களில் என்ஜினீயரிங் மாணவி உள்பட 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-06-29 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த ஆர்சுத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகள் காயத்ரி(வயது 23). இவர், தஞ்சையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் வயிற்றுவலி குணமாகவில்லை.

இதனால் மனம் உடைந்த காயத்ரி, சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

பள்ளி மாணவி

தஞ்சையை அடுத்த நெடார் ஆலங்குடியை சேர்ந்தவர் மகாதேவன். இவருடைய மகள் காவியா(16). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். காவியாவின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் தஞ்சையில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான உதவிகளை காவியா செய்து வந்தார்.

மேலும் வீட்டில் இருந்து தினமும் சமைத்து சாப்பாடு எடுத்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று வீட்டில் வேலைகளை செய்த காவியா சிறிது நேரம் தூங்கி விட்டார். சமையல் செய்யவில்லை. இதனால் பெற்றோர் திட்டுவார்களோ என பயந்து வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

பரிதாப சாவு

இதில் உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்