உடுமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 470 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்
உடுமலையில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 470 பேருக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
உடுமலை,
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (திருப்பூர்) ஆகியவற்றின் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று உடுமலை ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நடந்தது.
முகாமில் திருப்பூர், சென்னை,கோவை,ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள 95 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான பணிகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்தனர்.வேலை வாய்ப்புக்காக வந்தவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று தங்களுக்கு பிடித்தமான நிறுவனங்கள்,பிடித்தமான பணிகள் ஆகியவற்றில் விண்ணப்பங்களைப் கொடுத்தனர்.
4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து பணி தேவை குறித்து விண்ணப்பத்தை கொடுத்து பெயரை பதிவு செய்தனர். இந்த முகாமில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் முன்னிலை வகித்து பேசினார். வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் ஆ.லதா,திட்ட விளக்கவுரையாற்றினார். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரா.ராதிகா வரவேற்றுப் பேசினார். விழாவில் உடனடியாக 470 பேருக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கலெக்டர் கே.எஸ். பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கல்லூரியின் தாளாளர் ஜி.ரவீந்திரன் பொன்னாடை போர்த்தி மரக்கன்றுகளை நினைவுப்பரிசாக வழங்கினார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கே.ரமேஷ்குமார் வாழ்த்தி பேசினார்.
ஸ்ரீஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ்.கலைச்செல்வி, மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தின் தலைவர் வக்கீல் கே.மனோகரன், காந்திநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தலைவர் ஏ.ஹக்கீம், உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஆர்.முருகேசன், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் எஸ்.நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.