பாபநாசத்தில் மாநில செயற்குழு கூட்டம்: கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் இந்து முன்னணி வலியுறுத்தல்

கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாபநாசத்தில் நடந்த இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-06-29 21:45 GMT
விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. மாநில தலைவர் காடேசுவர சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் பக்தவச்சலம், பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், அரசுராஜா, இணை அமைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.எம்.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

மேலும் கூட்டத்தில் இந்து முன்னணியின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் வருங்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினர்.

இதுதொடர்பாக மாநில தலைவர் காடேசுவர சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அய்யா வைகுண்டசுவாமி, கிறிஸ்தவர்களின் பைபிளை படித்தார் என்று தவறான தகவலை பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் சிறந்த ஆன்மிகவாதி. இந்து மக்களை ஒற்றுமைப்படுத்தினார்.

கடையநல்லூர் அருகே ஆனைகுளத்தில், குறிப்பிட்ட மக்களின் பட்டா நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்டத்தில் சிலர் கலவரங்களை தூண்டி விட்டு அதன் மூலம் திருவிழாவை நடத்த விடாமலும், இதன் மூலம் கோவிலுக்கு பூட்டு போடுவதையும் அரசு தடுக்க வேண்டும். இந்து கோவில்களுக்கு தகுந்த பாதுகாப்பை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்து முன்னணி போராட்டம் நடத்தும்.

ராஜராஜ சோழன் பற்றி தவறாக பேசிய சினிமா டைரக்டர் ரஞ்சித் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் என்று அரசு செலவு செய்து கொண்டிருக்கிறது. கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை நலிவடைந்த கோவில்களுக்கு கொடுக்க வேண்டும். அத்துடன் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகமும் நடத்த வேண்டும்.

மேலும் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தனியார் பெயரில் பட்டா போட்டு இருக்கும் கோவில் நிலங்களை மீட்க அதிகாரிகள் முன்வரவேண்டும். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே ஆக வேண்டும். ராமர் கோவிலை கட்ட வலியுறுத்தி மத்திய உள்துறை மந்திரியிடம் இந்து முன்னணி சார்பில் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் தங்க மனோகர், மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நாகராஜ், அம்பை ஒன்றிய தலைவர் சங்கர், விக்கிரமசிங்கபுரம் நகர தலைவர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் இன்றும் நடக்கிறது. இதில் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கலந்துகொள்கிறார்.

மேலும் செய்திகள்