சிவகிரி அருகே தீ விபத்து: கரும்பு தோட்டம்– மரங்கள் எரிந்து நாசம்

சிவகிரி அருகே நடந்த தீ விபத்தில் கரும்பு தோட்டம் மற்றும் மரங்கள் எரிந்து நாசம் ஆனது.

Update: 2019-06-29 22:15 GMT

சிவகிரி, 

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தண்டக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவிலான விவசாய தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த கைலாஷ் என்கிற சுப்பிரமணியன் என்பவர் குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டு உள்ளார்.

இந்தநிலையில் அங்குள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் உள்ள முட்புதர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பின்னர் இந்த தீ மளமளவென பரவி கரையோரம் இருந்த பனை மரம், வேப்ப மரம் ஆகியவற்றிலும் பற்றி எரிய தொடங்கியது. ஏற்கனவே கடும் வறட்சி காரணமாக மரங்கள் கருகி காணப்பட்டன. இதனால் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.

பின்னர் இந்த தீ அருகில் கைலாஷ் பயிரிட்டிருந்த கரும்பு பயிரில் பற்றியது. இதில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கரும்புகள் அனைத்தும் எரிந்தன. மேலும் தீ அருகில் இருந்த விவசாயி தனசேகர் என்பவரின் கரும்பு தோட்டத்துக்கும் பரவ தொடங்கியது.

உடனே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்று அதிகமாக வீசியதால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஒரு கட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் கரும்பு தோட்டத்தின் உள்பகுதிக்கு சென்று தீயை அணைத்து கொண்டிருந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் நாலாபுறமும் தீயணைப்பு வீரர்களை சுற்றிலும் தீ பரவியது. இதில் சுதாரித்துக்கொண்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர் தப்பியது. எனினும் இந்த தீ விபத்தில் கைலாஷ் பயிரிட்டிருந்த 3 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு மற்றும் தனசேகரின் 1 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு என மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் எரிந்து நாசம் ஆனது. அதுமட்டுமின்றி கீழ்பவானி வாய்க்காலின் கரையோரம் இருந்த 100–க்கும் மேற்பட்ட பனை மற்றும் வேப்ப மரங்கள் எரிந்து நாசம் ஆனது.

மேலும் செய்திகள்