சிதம்பரத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டல், தீக்குளித்த ஓய்வுபெற்ற ஆசிரியர், சிகிச்சை பலனின்றி சாவு
சிதம்பரத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதால், மனமுடைந்து தீக்குளித்த ஓய்வுபெற்ற ஆசிரியர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிதம்பரம்,
சிதம்பரம் வேலவன் நகரை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 75). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனபால் மனைவி ராசாத்தி (64) என்பவரிடம் இருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சம்பந்தமூர்த்தி என்பவரிடம் இருந்தும் கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக ராஜாராமன், அவர்களிடம் குறிப்பிட்ட தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராசாத்தி, சம்பந்தமூர்த்தி, சம்பந்தமூர்த்தி மனைவி வளர்மதி ஆகியோர் ராஜாராமனின் வீட்டுக்கு சென்று அவரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டினர்.
இதில் மனமுடைந்த ராஜாராமன் நேற்று முன்தினம் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜாராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இதுபற்றி சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தமூர்த்தி, ராசாத்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர். வளர்மதியை தேடி வருகின்றனர்.