கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்கு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி முற்றுகை
கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்கு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது பெரியபுலியூர் கிராமம். இங்கு உள்ள ஊராட்சி அலுவலகத்தில் நேற்று அரசு பற்றாளர் பூமிநாதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், ஊராட்சி செயலாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் பெரியபுலியூர் பகுதியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையால் காற்று மாசு ஏற்படுகிறது என்று கிராம மக்கள் சரமாரி புகார் கூறினர். இந்த தொழிற்சாலையை மூடுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்தின் அடிப்படையில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு கிராம சபை கூட்டம் முடிவடைந்தது.
முற்றுகை
இந்த நிலையில் நேற்று மாலை மேற்கண்ட தனியார் இரும்பு உருக்குத்தொழிற்சாலையின் முன்பு அமர்ந்து கிராம மக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களின் நலனை பாதிக்கும் தொழிற்சாலையை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். தகவலறிந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு, மாசு கட்டுபாட்டு அதிகாரி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயக்குமார் மற்றும் பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தை நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவடைந்தது. பேச்சுவார்த்தையின்போது தொழிற்சாலையின் காற்று மற்றும் நீர் மாசுவை ஆய்வுக்கு உட்படுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்க மாசு கட்டுபாட்டு வாரிய தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து தங்களது 3 மணி நேர முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.