தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள் நெரூர் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்
நெரூர் தென்பாகம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் அன்பழகன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள் எனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிப் பகுதியிலும் கடந்த மே மாதம் 1-ந்தேதி தொழிலாளர் தினத்தில் நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டதால், அதற்கு மாற்றாக ஜூன் 28-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெரூர் தென்பாகம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், திட்ட அறிக்கை, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதிசெலவின விவரங்கள் குறித்தும், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), முதல்-அமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2019-2020 உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம் உறுதிமொழியை கிராம சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்று கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் பேசுகையில், தற்போது கரூர் மாவட்டத்தில் சராசரியாக பெய்யவேண்டிய மழையின் அளவை விட குறைந்த அளவே மழை பெய்துள்ளதால் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களாகிய நீங்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். வீணாக்கக்கூடாது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் மூலம் உங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை ஒற்றுமையுடன் சேர்ந்து அகலப்படுத்தவும், ஆழப்படுத்தவும் சீர் செய்யவும், மரக்கன்றுகளை வளர்க்கவும் பொதுமக்கள் முன்வரவேண்டும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கபட்டுள்ள பிளாஸ்டிக்்பொருட்களை யாரும் பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கழிப்பறைகளை பயன்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழிக்காத ஊராட்சியாக உங்கள் ஊராட்சியை மாற்ற நீங்கள் முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.
இதில், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.