வையம்பட்டி அருகே முதியவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தொழிலாளி கைது

வையம்பட்டி அருகே முதியவரின் கழுத்தை அறுத்து கொலைசெய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-28 22:15 GMT
வையம்பட்டி, 

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த டேம்நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 70). கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரது பட்டறையின் அருகே படுத்திருந்த போது பணம் மற்றும நகை மாயமானது. அதை களத்துப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி அற்புதசேகர்(47) எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி ரெத்தினம் வையம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் நேற்று முன்தினம் அற்புத சேகரை விசாரணைக்கு அழைத்துவந்தனர். ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால் மறுநாள்(நேற்று) வருமாறு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நேற்று காலை ரெத்தினம் பட்டறையின் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அற்புதசேகரின் மீது ரெத்தினம் ஏற்கனவே புகார் அளித்திருந்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதை தொடர்ந்து அவரிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குடிபோதையில் இருந்த அவர் ரெத்தினத்தின் கழுத்தை கத்தியால் அறுத்து, அவரை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அற்புதசேகரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்