ஜவுளிக்கடை ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில், வாலிபருக்கு 7 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு

ஜவுளிக்கடை ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-06-28 23:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் பானாம்பட்டு பாதை காந்தி நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 33). இவருக்கும் திருக்கோவிலூர் அருகே செம்மார் கிராமத்தை சேர்ந்த பத்மபிரியா (23) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சரவணக்குமார் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பத்மபிரியா அடிக் கடி சென்னைக்கு சென்று சரவணக்குமாரிடம் பணம் வாங்கி வந்துள்ளார்.இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் பத்மபிரியா சரவணக் குமாருக்கு தெரி யாமல் செம்மார் கிராமத்தை சேர்ந்த ராஜலிங்கம் (27) என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார். இதையறிந்த சரவணக்குமார், சென்னையில் இருந்து விழுப்புரம் வந்து பத்மபிரியாவிடம் சென்று ஏன் 2-வதாக திருமணம் செய்து கொண்டாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் தான் இதுவரை கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி பிரச்சினை செய்துள்ளார்.

அப்போது முத்தாம்பாளையம் முருகன் கோவில் அருகில் வரும்படியும் அங்கு வந்து பணத்தை தருவதாகவும் பத்மப்பிரியா கூறியுள்ளார். அதன்படி கடந்த 23.9.17 அன்று காலை 11.30 மணியளவில் முத்தாம்பாளையம் முருகன் கோவில் அருகில் சரவணக்குமார் காத்திருந்தார்.

அந்த சமயத்தில் அங்கு வந்த ராஜலிங்கம், அவரது நண்பரான விழுப்புரம் ரெயின்போ நகரை சேர்ந்த பிரபாகரன் (28), பத்மபிரியா, அவரது சகோதரியான விழுப்புரம் ரெயின்போ நகரை சேர்ந்த அப்துல்ஹக்கீமின் மனைவி ஹேமாமாலினி (25) ஆகியோர் சேர்ந்து சரவணக்குமாரை தகாத வார்த்தையால் திட்டினர். இதில் பத்மபிரியா அருகில் கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து சரவணக்குமாரின் தலையில் தாக்கினார். மேலும் ராஜலிங்கம் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணக்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் காயமடைந்த சரவணக்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இதுகுறித்து சரவணக்குமார் கொடுத்த புகாரின்பேரில் ராஜலிங்கம், பிரபாகரன், பத்மபிரியா, ஹேமாமாலினி ஆகிய 4 பேர் மீதும் கொலை முயற்சி பிரிவின் கீழ் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பாக விழுப்புரம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், குற்றம் சாட்டப்பட்ட ராஜலிங்கத்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பத்மபிரியாவுக்கு ஏற்கனவே கைக்குழந்தை இருப்பதாலும், தற்போது கர்ப்பிணியாக இருப்பதாலும் அதை கருத்தில் கொண்டு அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தும், பிரபாகரன், ஹேமாமாலினி ஆகிய இருவரையும் விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜரானார்.

மேலும் செய்திகள்