விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு மறியல்

விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பிளஸ்-2 முடித்த அந்த பள்ளியின் மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-28 23:00 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்காக மடிக்கணினிகள் வந்திருப்பதாக கல்வி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனை அறிந்த பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகள், தங்களுக்கு இன்னும் மடிக்கணினிகள் வழங்கப்படாததை கண்டித்து நேற்று காலை குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் பள்ளி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவர்கள் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகளுக்கு உடனடியாக மடிக்கணினிகள் வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷத்தை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கஜபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மடிக்கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மடிக்கணினி வழங்கக்கோரி பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள், அந்த பள்ளியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்