தொழில் முனைவோர்களுக்கு அனைத்து உதவிகளையும் மாவட்ட தொழில் மையம் செய்து தருகிறது கலெக்டர் பேச்சு
தொழில் முனைவோர்களுக்கு அனைத்து உதவிகளையும் மாவட்ட தொழில் மையம் செய்து தருகிறது என்று கலெக்டர் கந்தசாமி பேசினார்.
திருவண்ணாமலை,
ஐக்கிய நாடுகளின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் குறித்த விழிப்புணர்வு முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-
வருங்கால தொழில் முனைவோர்கள் தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட தொழில் மையம் செய்து தருகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்ற மானியத்திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும்.
புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிறுவ ஒற்றை சாளர முறை மூலம் அனைத்து விதமான உரிமங்கள் மற்றும் தடையில்லா சான்றுகள் மாவட்ட தொழில் மையத்தின் வழியாக இணையதளம் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் திருவண்ணாமலை மாவட்ட தொழில் மைய பொது மேலாளார் சிதம்பரம் தொடக்க உரையாற்றினார்.
இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அரசுத்துறை அலுவலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர்.