அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
கூட்டுறவுத்துறையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என நாமக்கல்லில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் குறித்தும் அரசு அதிகாரிகள், விவசாயிகளுக்கு விளக்கி கூறினர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.
அப்போது நடந்த விவாதங்களின் விவரம் பின்வருமாறு:-
விவசாயி பெரியதம்பி:- குடிநீரும், உணவும் முக்கியமானது. தற்போது உள்ள வறட்சியை கருத்தில் கொண்டு நாமக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மலையில் தண்ணீர் இல்லாததால் குரங்குகளும், மயில்களும் கிராமத்திற்கு வந்து பயிர்களை சேதப்படுகின்றன. எனவே மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கலெக்டர் ஆசியா மரியம்:- பரிசீலனை செய்யப்படும்.
விவசாயி துரைசாமி:- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலமாக மழை இல்லாத காரணத்தால், பயிரிடப்பட்ட நிலக்கடலை, மரவள்ளி மற்றும் சோளப்பயிர்கள் காய்ந்துவிட்டன். மேலும் 10 ஆயிரம் தென்னை மரங்களும் காய்ந்துவிட்டன. எனவே வறட்சி நிவாரணம் வழங்குவதோடு, கால்நடைகளுக்கு மானிய விலையில் வைக்கோல் வழங்க வேண்டும்.
அதேபோல் கூட்டுறவுத் துறையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயதிற்கு மேலான விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.
கலெக்டர் ஆசியா மரியம்:- ஏற்கனவே உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உங்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும்.
விவசாயி வையாபுரி:- பயிர்கள் காயாமல் இருக்க ராஜவாய்க்காலில் தண்ணீர் விட வேண்டும்.
கலெக்டர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி குப்புத்துரை:- ராஜவாய்க்காலில் தொடர்ந்து 10 நாட்களுக்கு தண்ணீர் விட ஏற்பாடு செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை ராஜவாய்க்கால் விவசாயிகளை அழைத்து பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் கூட்டம் நடத்த வேண்டும்.
கலெக்டர்:- பரிசீலனை செய்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
விவசாயி சந்திரசேகர்:- கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நாமகிரிப்பேட்டை செல்லும் வழியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
கலெக்டர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதேபோல் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே கருகிய நிலக்கடலை, சோளம் மற்றும் மரவள்ளி பயிர்களை விவசாயிகள் அதிகாரிகளிடம் காட்டுவதற்கு கொண்டு வந்தது குறிப்பிட்டத்தக்கது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப்-கலெக்டர் கிராந்திகுமார், உதவி கலெக்டர் மணிராஜ், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சந்தானம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கவுதமன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.