சென்னை செல்லும் ரெயிலில் பயணிகளை மிரட்டி பணம் பறித்த போலி டிக்கெட் பரிசோதகர்
சென்னை செல்லும் ரெயிலில் பயணிகளை மிரட்டி போலி டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தார்.
ஜோலார்பேட்டை,
தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பணிபுரியும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் ரெயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது பொது பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் சீருடை அணிந்து கொண்டு பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தார். சில பயணிகள் டிக்கெட் எடுக்காததால், அவர்களிடம் எதற்காக டிக்கெட் எடுக்கவில்லை என கூறி கூடுதல் அபராதத் தொகை செலுத்துங்கள் என கூறினார்.
மேலும் உங்களை போல், டிக்கெட் எடுக்காதவர்களை பிடித்து கொடுத்தால் எங்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு, சலுகைகள் கிடைக்கும் என மிரட்டி அபராதத் தொகையை வசூல் செய்தார். பயணிகளும் பயந்து போய் அவர் கேட்ட பணத்தை கொடுத்தனர்.
அதேபோல், ஒவ்வொரு பெட்டியிலும் சென்று பணம் வசூலித்தார். இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக படம் பிடித்தார். ரெயில் சென்னை அருகே பெரம்பூர் வந்ததும் சீருடை அணிந்திருந்த நபர் இறங்கினார். இதனைத்தொடர்ந்து ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்றது.
செல்போனில் படம் பிடித்த காட்சிகளை சென்னை ரெயில் நிலைய அதிகாரிகளிடம் காண்பித்து பயணிகள் புகார் தெரிவித்தனர். அந்த வீடியோ காட்சிகளை பார்த்தபோது, அந்த நபர் போலி டிக்கெட் பரிசோதகர் என தெரியவந்தது. பின்னர் ரெயில் நிலைய அதிகாரிகள் பயணிகளிடம், அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதுபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடும் ரெயிலில் சீருடை அணிந்து பயணிகளை ஏமாற்றி பணம் வசூல் செய்த போலி டிக்கெட் பரிசோதகரை சேலம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.