திம்பம் மலைப்பாதையில் 24 மணி நேரமும் லாரிகள் சென்று வர அனுமதி - கனரக வாகனங்களுக்கு தடை

திம்பம் மலைப்பாதையில் 24 மணி நேரமும் லாரிகள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் டிரைவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் செல்வதற்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-06-28 22:15 GMT

சத்தியமங்கலம், 

சத்திமங்கலத்தை அடுத்த பண்ணாரி அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் இந்த மலைப்பாதையானது திண்டுகல்– பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. எனவே இந்த மலைப்பாதையில் தினமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இவ்வளவு போக்குவரத்து நிறைந்த திம்பம் மலைப்பாதையானது மிகவும் குறுகலான 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது ஆகும். இதனால் இந்த மலைப்பாதை வழியாக வரும் வாகனங்கள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் கவிழந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனை சாவடியில் இரவு நேரங்களில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மறுநாள் காலையில் அனுமதிக்கப்பட்டன. காலையில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படும்போது இந்த மலைப்பாதையின் இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் லாரி உரிமையாளர்களும் திம்பம் மலைப்பாதையில் 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையே திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நுழைவு கட்டண வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 1–ந் தேதி பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் அறிவித்தார்.

இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து சத்தியமங்கலம் பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளன.

இதற்கிடையே திம்பம் மலைப்பாதையில் 24 மணி நேரமும் லாரிகள் சென்று வரவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘திம்பம் மலைப்பாதையில் இரவில் லாரிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. எனவே 24 மணி நேரமும் லாரிகள் சென்று வரலாம். அதே நேரத்தில் 12 சக்கரங்களுக்கு மேல் கொண்ட கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பாரம் மற்றும் அதிக அளவு உயரத்துக்கு பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை,’ என்றனர்.

மேலும் செய்திகள்